search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ மேன் ஸ்ரீதரன்
    X
    மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

    கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்க தயார் - மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

    கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்க தயார் என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
    கோழிக்கோடு

    கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதரன் டெல்லி, கொச்சி மெட்ரோ திட்டங்களின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    தற்போது 88 வயதாகும் நிலையில், பா.ஜ.க.வில் இணைய உள்ளார். தமது அரசியல் பிரவேசம் குறித்து  மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கூறியதாவது:

    நான் மாநிலத்திற்கு சிறப்பான ஒன்றைச் செய்ய விரும்புவதால்  பா.ஜ.க.வில் சேர முடிவு செய்தேன். நரேந்திர மோடி குஜராத்தின் முதல் மந்திரியாக இருந்தபோது, ​​பல வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அவருடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதுவும் கட்சியில் சேர முடிவெடுப்பதற்கு ஒரு காரணம்.

    மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்  மற்றும்  கம்யூனிஸ்ட் ஆகிய இரு அரசியல் கட்சிகளால்  மாநிலத்தை முறையாக நிர்வகிக்க முடியவில்லை.

    மாநிலத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் தங்கள் கட்சி நலன்களைப் பாதுகாப்பதில் அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். மேலும், மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக  மத்திய அரசுடன் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாம்  மத்திய அரசுடன் இணைந்து செல்ல வேண்டும். இப்போது பா.ஜ.க. மட்டுமே அதைச் செய்ய முடியும்.

    கேரளாவில், பா.ஜ.க.வை  நோக்கி, ஏராளமானோர் சாரை, சாரையாக படையெடுக்கின்றனர். கவர்னர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால், அதில் எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை.

    வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட நான் தயாராக உள்ளேன். கட்சி வாய்ப்பளித்தால் களத்தில் இறங்குவேன். கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முதல் மந்திரி பதவி வகிக்கவும் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×