search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திஷா ரவி
    X
    திஷா ரவி

    சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்தது மிகவும் கொடுமை... வலுக்கும் எதிர்ப்புகள்

    வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்ததற்கு, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். 

    கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை, பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி (வயது 22), சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். சூழலியல் ஆர்வலரான அவர், ஒரு போராட்டக்குழு சார்பில் இதனை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

    இந்நிலையில் பெங்களூரு வந்த டெல்லி போலீசார், திஷா ரவியை கைது செய்தனர். வன்முறையை தூண்டிவிடுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    போலீசார் நடத்திய விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், கிரேட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன் தனது வழக்கில் தானே வாதாட உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    திஷா ரவியை கைது செய்து காவலில் வைத்திருப்பது "முற்றிலும் கொடூரமானது" என்றும் "தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்" என்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்) கூறினார்.

    இதேபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சீதாராம் யெச்சூரி, ஆனந்த் சர்மா, சசி தரூர் என பல்வேறு தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 

    கிரேட்டா தன்பெர்க் பதிவிட்டிருந்த கருத்துகள் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும், கிரேட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×