search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா காலடி எடுத்து வைத்து ஓராண்டாகிறது

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசோடு இணைந்து மாநில அரசுகளும் மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
    இப்படி ஒரு கொடிய ஆட்கொல்லி தொற்றுநோய் உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் ஆட்டி படைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது உலகின் மற்ற நாடுகள் எல்லாம் பெரிதாக அதனை கண்டு கொள்ளவில்லை.

    பின்னர் சீனாவில் இருந்து சென்றவர்கள் மூலமாக மெல்ல... மெல்ல மற்ற நாடுகளில் நோய் பரவத்தொடங்கியது. இதன் பிறகே ஒட்டுமொத்த உலக நாடுகளும் உஷாராகின.

    குளிர் பிரதேசங்களில் மட்டுமே வைரஸ் நீண்ட நாட்கள் வரையில் உயிர் வாழும் என்கிற கருத்து அப்போது பரவலாகி இருந்தது. அதிக வெப்பத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற கருத்தே நிலவியது.

    இந்தநிலையில் தான் கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி கொரோனா வைரஸ் அடியெடுத்து வைத்தது முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சீனாவில் உள்ள வுகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 3 மாணவிகள் அந்த நாட்டில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். ஆனால் கொரோனா வைரஸ் இந்த மாணவிகளில் ஒருவரை அங்கிருந்தே விரட்டி வந்துள்ளது.

    கேரளாவை வந்தடைந்ததும் குறிப்பிட்ட மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதைக் கண்டு அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதுவே இந்தியாவில் ஏற்பட்ட முதல் கொரோனா தொற்றாக பதிவாகி உள்ளது. பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பரவியதால், தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்ரவரி மாதத்தில் இருந்தே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

    கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

    ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய என்ஜினீயர் ஒருவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் வைரஸ் தொற்று வேகமாக பரவியது.

    பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரித்த பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை தொட்டது.

    கேரளா, தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்தன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அது இன்னும் தொடர்கிறது.

    அதேநேரத்தில் நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு தளர்வுகளையும் முதலில் அறிவித்த கேரள மாநிலம் தற்போது மீண்டும் தீவிர கொரோனா தொற்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே நோய் தொற்று தற்போது அதிகமாக உள்ளது.

    மற்ற மாநிலங்களில் படிப்படியாக வைரஸ் பாதிப்பு குறையத்தொடங்கி உள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் 1 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனாவால் முடங்கி உள்ளனர்.

    கொரோனா பாதித்தவர்களில் 1 கோடியே 4 லட்சம் பேர் வரையில் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கி இருந்தது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு வெகுவாக குறையத்தொடங்கி இருக்கிறது. தினமும் 500-க்கும் குறைவானவர்களே பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 500-ஆகவே உள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 818 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் 8 லட்சத்து 19,850 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4269 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசோடு இணைந்து மாநில அரசுகளும் மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழக அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகள் கொரோனாவை விரட்டி அடித்துள்ளன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அந்த அளவுக்கு தமிழகத்தில் நோய் தொற்று அதிகமாகவே இருந்தது.

    கொரோனா பாதிப்பு உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடந்த ஓராண்டாக முடக்கிப்போட்டு இருந்தது. அதில் இருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தாலும் அதன் பாதிப்புகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு இருக்கும் என்றே சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    எனவே மக்கள் கொரோனா பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள முககவசம் அணியும் பழக்கத்தை நிறுத்திவிடக் கூடாது என்பதே அவர்களின் அன்பான கோரிக்கையாகவும் உள்ளது.

    இதனால் ஓராண்டை கடந்தும் தொடரும் முக கவச வாழ்க்கைக்கு முடிவு எப்போது? என்பது தான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.
    Next Story
    ×