search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
    X
    மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

    நாடு முழுவதும்146 மாவட்டங்களில் ஒரு வாரமாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

    நாடு முழுவதும் 146 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.
    புதுடெல்லி:

    கொரோனா விவகாரம் தொடர்பாக மந்திரிகளின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார்.

    மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி, அஸ்வினி குமார் சவுபே, நித்யானந்த் ராய், மான்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பூசிகளின் உள்நாட்டு தேவை, வெளிநாடுகளில் இருந்து வந்த கொள்முதல் ஆர்டர் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோர் தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தனர்.

    கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-

    கொரோனாவின் வளர்ச்சியை இந்தியா முடக்கி விட்டது. நாடு முழுவதும் 146 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 18 மாவட்டங்களில் 14 நாட்களாக புதிய பாதிப்பு இல்லை.

    6 மாவட்டங்களில் 21 நாட்களாகவும், 21 மாவட்டங்களில் 28 நாட்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. இவையெல்லாம், இதுவரை 19 கோடியே 50 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்தி, சிகிச்சை அளித்ததால் ஏற்பட் முன்னேற்றங்கள். நாட்டின் ஒரு நாள் பரிசோதனை திறன் 12 லட்சமாக அதிகரித்துள்ளது.

    பிரதமர் மோடி மேற்கொண்ட அணுகுமுறையால், கொரோனாவை வெற்றிகரமாக ஒடுக்கி உள்ளோம். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.

    நாட்டில் தற்போது 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் 0.46 சதவீதம் மட்டுமே. தீவிர சிகிச்சை பிரிவில் 2.20 சதவீதம் பேரும், ஆக்சிஜன் உதவியுடன் 3.02 சதவீதம் பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வினியோகித்து, உலக நம்பிக்கையை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் கே.சிங் கூறியதாவது:-

    நாட்டில் தாத்ரி நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் அதிக அளவாக 99.79 சதவீதம்பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    மும்பை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுவோரில் 70 சதவீதம்பேர், மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில்தான் உள்ளனர். பிற நாடுகளில், உருமாறிய கொரோனா பரவிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, இனிவரும் மாதங்களில் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×