search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளம் விபத்து
    X
    மேற்கு வங்காளம் விபத்து

    மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி

    மேற்கு வங்காளத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் திருமண கோஷ்டியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கரமான விபத்து நடந்தது.

    கற்பாறைகளை ஏற்றி வந்த ஒரு சரக்கு வாகனம், எதிரே வந்த ஒரு பஸ் மற்றும் 3 கார்கள் மீது மோதியது.

    பஸ் மற்றும் 3 கார்களில் ஒரு திருமண கோஷ்டி துப்குரிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனங்கள், தவறான திசையில் சென்றதாகவும், பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கோர விபத்தில், 14 பேர் பலியானார்கள். அனைவரும் திருமண கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 6 பெண்களும், 4 குழந்தைகளும் அடங்குவர். 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தால் போக்குவரத்து முடங்கியது. கிரேன்கள் உதவியால், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர், போக்குவரத்து சீரடைந்தது.

    பிரதமர் மோடி


    இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘துப்குரியில் நடந்த சாலை விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

    மேலும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் இரங்கல் தெரிவி்த்துள்ளார்.
    Next Story
    ×