search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போராட்டக்களத்தில் விவசாயிகளுக்கு உதவும் நவீன எந்திரங்கள்

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 3 வாரங்களை எட்டியிருக்கும் நிலையில், போராட்டம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்வதற்கு நவீன தொழில்நுட்பங்களும் அவர்களுக்கு கைகொடுக்கின்றன.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 3 வாரங்களை எட்டியிருக்கும் நிலையில், இந்த போராட்டம் எந்தவித இடையூறும் இன்றி தொடர்வதற்கு நவீன தொழில்நுட்பங்களும் அவர்களுக்கு கைகொடுக்கின்றன.

    குறிப்பாக போராட்டக்காரர்களுக்கு உணவு தடையின்றி கிடைப்பதற்கு சப்பாத்தி தயாரிக்கும் மெகா எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்களில் ஒரு மணி நேரத்துக்கு 1000 முதல் 1,200 சப்பாத்திகள் வரை தயாரிக்க முடியும். காலை முதல் மதியம் வரை பயன்படுத்தப்படும் இந்த தானியங்கி எந்திரங்களால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் பசி நீங்குகிறது.

    மேலும் விவசாயிகள் தங்கள் துணிகளை துவைத்து பயன்படுத்துவதற்கு வாஷிங் மெஷின்கள் ஏராளமான எண்ணிக்கையில் அங்கு பணியில் உள்ளன. இந்த வாஷிங் மெஷின்கள் நாள் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் சலவை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.

    இதைப்போல இரவில் வெளிச்சத்துக்காக மின் விளக்குகளை பயன்படுத்தவும், செல்போன்களுக்கு ‘சார்ஜ்’ ஏற்றவும் மின்சார வசதிக்காக டிராக்டர்களில் சோலார் மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. தங்கள் போராட்டம் பற்றிய புதிய தகவல்களை அறிவதற்கு செல்போன்தான் துணையாக இருப்பதாக கூறியுள்ள விவசாயிகள், எனவே அவற்றை சார்ஜ் ஏற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு போராட்டக்களத்தில் பயன்பட்டு வரும் இந்த நவீன எந்திரங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குருத்வாரா கமிட்டிகள் மற்றும் போராட்ட ஆதரவாளர்கள் வழங்கி உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் ஒரு சில எந்திரங்களை தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருக்கின்றனர். இதனால் அவர்களின் போராட்டம் தடையின்றி தொடர்கிறது.
    Next Story
    ×