search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    இந்தியாவின் முதல் ‘எம்.ஆர்.என்.ஏ.’ தடுப்பூசி- மனித பரிசோதனைக்கு அனுமதி

    இந்தியாவில் முதல் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்படுகிறது. இதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் ஆய்வுகள் பெரும்பாலானவை அந்த வைரசின் வீரியத்தை குறைத்து அதை உடலுக்குள் செலுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளன.

    ஆனால் அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் ‘‘எம்.ஆர்.என்.ஏ.’’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் இதுவாகும். இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம்.

    கொரோனா வைரசில் ஆர்.என்.ஏ. என்ற மரபு சங்கிலி உள்ளது. இவற்றில் பல பிரதிகள் இருக்கிறது. அதில் ஒரு பிரதி எம்.ஆர்.என்.ஏ. ஆகும்.

    இந்த இரண்டிலும் ஒரே மாதிரியான மரபணு வரிசை இருக்கும். எம்.ஆர்.என்.ஏ.வை தனியாக பிரித்து அது போலவே செயற்கை முறையில் தயாரித்து நானோ துகள் கொழுப்பு பந்துகளுக்குள் செலுத்தி இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசியை உடலுக்குள் செலுத்தியதும் ரத்தத்தில் கொரோனா வைரசின் கூர்ப்புரதங்கள் உற்பத்தி ஆகும். அதை கவனிக்கும் தடுப்பாற்றல் மண்டலம் அவற்றை எதிர்ப்பதற்காக எதிரணுக்களை நிரந்தரமாக உருவாக்கி விடும். இதன் மூலம் வைரஸ் தொற்று அழிக்கப்படும்.

    எதிரணுக்கள் நிரந்தரமாக உருவாக்கப்படுவதால் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தாலும் அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் எளிதில் செயல்படும்.

    இந்த எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்தை கொண்டு இந்தியாவில் புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஜென்னோவா மருந்து நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த எச்.டி.டி. நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

    இந்த தடுப்பூசியின் மனித பரிசோதனைக்கு அனுமதி வழங்கக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜென்னோவா நிறுவனம் விண்ணப்பித்தது.

    இதற்கிடையே அந்த நிறுவன தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனைக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு நிபந்தனைகளுடனான அனுமதியை வழங்கி இருக்கிறது.

    இதையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் முதல் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்படுகிறது.

    இதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×