search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆயுர்வேத முதுகலை மாணவர்களுக்கு ஆபரேஷன் செய்ய பயிற்சி - மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

    ஆயுர்வேத முதுகலை மாணவர்கள், குறிப்பிட்ட வகை ஆபரேஷன்களை செய்ய பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய மருத்துவ முறைகளின் மத்திய கவுன்சில் (முதுகலை ஆயுர்வேத கல்வி) ஒழுங்குமுறை விதிகள்-2016-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிகள் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ முறைகளின் மத்திய கவுன்சில், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, குறிப்பிட்ட வகை ஆயுர்வேத மருத்துவத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு, சில குறிப்பிட்ட வகை ஆபரேஷன்களை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 39 பொது ஆபரேஷன்களும், கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான 19 ஆபரேஷன்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன.

    பாதிப்பு ஏற்படுத்தாத கட்டிகளை அகற்றுதல், சிதைந்த உடல் திசுக்களை அகற்றுதல், கண்புரை ஆபரேஷன், மூக்கு சம்பந்தப்பட்ட ஆபரேஷன்கள் ஆகியவை பயிற்சி அளிக்கப்பட உள்ள ஆபரேஷன்களில் அடங்கும்.

    இதன்மூலம், முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, அந்த மாணவர்கள் தாங்களே சுயமாக இந்த ஆபரேஷன்களை மேற்கொள்ள முடியும் என்று அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா கூறியதாவது:-

    இது புதிய முடிவோ அல்லது கொள்கை மாற்றமோ அல்ல. ஏற்கனவே முதுகலை ஆயுர்வேத படிப்பில் இருப்பதை பற்றிய விளக்கம்தான். மேலும், எல்லா ஆபரேஷன்களையும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு திறந்துவிடவில்லை.

    அதே மாதிரி எல்லா முதுகலை ஆயுர்வேத மருத்துவர்களும் ஆபரேஷன் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    ஷால்யா, ஷாலக்யா ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய மருத்துவ முறைகளின் மத்திய கவுன்சில் ஆட்சிமன்ற குழு தலைவர் வைத்ய ஜெயந்த் தேவபூஜாரி கூறுகையில், “இந்த ஆபரேஷன்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுர்வேத கல்வி நிறுவனங்களில் நடப்பவைதான். இப்போது, அதை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறோம். மேலும், எந்தெந்த ஆபரேஷன்கள் செய்யலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்களுக்கு தெளிவு பிறக்க இது உதவும்” என்றார்.

    இதற்கிடையே, டாக்டர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×