search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி (கோப்பு படம்)
    X
    பிரதமர் மோடி (கோப்பு படம்)

    நக்ரோட்டா என்கவுண்டர் - பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

    ஜம்மு மாவட்டம் நக்ரோட்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே நடந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    புதுடெல்லி:

    ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியில் 4 பயங்கராவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த லாரியை நக்ரோட்டாவில் உள்ள சோதனைச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் நிறுத்தினர். இதனால், லாரி டிரைவர் அங்கிருந்து உடனடியாக தப்பிச்சென்றுவிட்டான். ஆனால், லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 3 மணி நேரத்திற்கும்  மேலாக நீடித்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பெருமளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. சமீபகாலத்தில் மிகப்பெரிய அளவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இதுவாகும். 

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் மும்பை தாக்குதலின் நினைவு நாளில் (நவம்பர் 26) ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    மேலும், காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சீர்குலைப்பதற்காக மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், நக்ரோட்டா என்கவுண்டர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

    ’பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கராவாதிகள் கொல்லப்பட்டு, மிகப்பெரிய அளவிலான வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் அழிவை ஏற்படுத்த நடைபெற்ற முயற்சிகள் மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளன என்பதை குறிக்கிறது.

    நமது பாதுகாப்புப் படைகள் மிகுந்த துணிச்சலையும், நிபுணத்துவத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றி. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள ஜனநாயக பயிற்சியை (தேர்தல்) குறிவைத்து நடத்தப்படவிருந்த மோசமான தாக்குதலை முறியடித்துவிட்டனர்’ என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×