search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    1 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு விடுவிக்கிறது - விவசாய மந்திரி தோமர் அறிவிப்பு

    விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏதுவாக மத்திய அரசு 1 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிப்பதாக மத்திய விவசாய மந்திரி தோமர் அறிவித்துள்ளார்.
    இந்தூர்:

    இந்தியாவில் இல்லத்தரசிகளின் சமையலறையில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக விளங்குவது வெங்காயம். வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்கிற மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடும் மழையால் வெங்காய உற்பத்தி பாதித்தது.

    இதனால் சந்தைகளுக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ஏறுமுகம் கண்டுள்ளது. சில்லரை விலையில் கிலோ ரூ.100 வரையில் வெங்காயம் விற்கப்படுகிறது.

    இதனால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டாலும் அது அனைத்து மக்களின் தேவைகளையும் சந்திக்க கூடியதாக இல்லை.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த தருணத்தில் வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என சாடினார். மேலும் வெங்காய இருப்பு தொடர்பாக வியாபாரிகளுக்கு விதித்துள்ள வரம்பு குறித்து மத்திய அரசிடம் பேசுவேன் எனவும் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் குஜராத் மாநிலம் தரம்புரி நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர், நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெங்காய விலை உயர்ந்துள்ளது குறித்து அரசு அறிந்திருக்கிறது. வெங்காய ஏற்றுமதிக்கு சரியான நேரத்தில் மத்திய அரசு தடை விதித்தது. அதே நேரத்தில் இறக்குமதிக்கான வழிகளையும் மத்திய அரசு திறந்து விட்டுள்ளது.

    மேலும் தனது கையிருப்பில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு ‘நபெட்’ என்னும் இந்தியாவின் தேசிய கூட்டுறவு சந்தைப்படுத்தல் சம்மேளனம் மூலம் விடுவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசு விடுவிக்கிற 1 லட்சம் டன் வெங்காயம் சந்தைகளுக்கு வருகிறபோது அதன் விலை சற்றே குறையும், மக்களுக்கு விலை உயர்வில் இருந்து இது நிவாரணமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×