search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 பேரை கொலை செய்த சஞ்சய்
    X
    9 பேரை கொலை செய்த சஞ்சய்

    ஒரு கொலையை மறைக்க 9 கொலை: குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
    பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் (24), மேற்கு வங்க மாநிலத்தின் மக்சூத் ஆகியோர் வாரங்கலில் உள்ள சணல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். அப்போது மக்சூத் மனைவி நிஷாவின் சகோதரி மகள் ரஃபிகாவுடன் (31), சஞ்சய் குமார் நெருங்கி பழகி வந்தார். ரஃபிகா கணவரை பிரிந்தவர். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    அவரது மூத்த மகளிடம் சஞ்சய் குமார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனை அறிந்த ரஃபிகா, சஞ்சய் குமாரை கண்டித்துள்ளார். இதனால் சஞ்சய் குமார், ரஃபிகாவை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை மேற்கு வங்கம் சென்ற சிறப்பு ரெயிலில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு மோர் பாக்கெட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

    மீண்டும் ஊருக்கு திரும்பிய சஞ்சய் குமாரிடம் ரஃபிகா எங்கே என நிஷா கேட்டுள்ளார். அவர் ஊருக்கு சென்றுள்ளதாகவும் திரும்பி வருவார் எனவும் மழுப்பலாக கூறியுள்ளார் சஞ்சய். இதனை தொடர்ந்து ரஃபிகா குறித்து அடிக்கடி கேட்க தொடங்கியதால் மக்சூத் குடும்பத்தினரை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கடந்த 20-ம் தேதி மக்சூத் மகன் ஷாபத்தின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட சஞ்சய், அங்கு சமைத்து வைத்திருந்த உணவில் தூக்க மாத்திரைகளை கலந்துள்ளார். வீட்டின் மாடியில் தங்கியிருந்த பீகார் இளைஞர்கள் இருவரின் உணவிலும் மாத்திரையை கலந்து உள்ளார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட அனைவரும் சீக்கிரமாகவே உறங்கியுள்ளனர்.

    தூக்கத்திலேயே மயக்கமடைந்த இவர்களை கோணிப்பையில் அடைத்து வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டுள்ளார். இதில் 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஒரு கொலையை மறைக்க மேலும் 9 கொலைகள் செய்த சஞ்சய்க்கு நீதிபதி மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
    Next Story
    ×