search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    மத்திய பிரதேச இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

    மத்திய பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தியதின் விளைவால் அந்த அரசு கவிழ்ந்தது. அதையடுத்து அங்கு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தது. ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி, அவருடன் பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

    தற்போது அந்த மாநில சட்டசபையில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலம் பெற இந்த தேர்தல் வெற்றி உதவும் என்ற நிலையில் அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அந்த மாநிலத்தில் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள், நேரடி பிரசாரம் செய்வதற்கு பதிலாக காணொலி காட்சி பிரசாரம் (மெய்நிகர் பிரசாரம்) செய்யும்படி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    ஆனால் இடைத்தேர்தலில் குவாலியர் தொகுதியில் போட்டியிடுகிற பா.ஜ.க. வேட்பாளரும், மாநில எரிசக்தி துறை மந்திரியுமான பிரதியுமான் சிங் தோமர், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனும் முறையிட்டது.

    அரசியல் சாசனம் பிரிவு 329-ன் கீழ், தேர்தல் நடத்தை மற்றும் நிர்வாகம் தங்களால் மேற்பார்வையிடப்படுவதாகவும், இதற்கு ஐகோர்ட்டு உத்தரவு தடையாக அமைவதாகவும் தேர்தல் கமிஷன் தனது மனுவில் கூறியது.

    தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தின்கீழ்தான், கொரோனா காலத்துக்கு ஏற்ப தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கு வழிமுறைகள் வகுத்ததாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் கூறி உள்ளது.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி பிரசாரம் செய்யுமாறு கூறிய மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

    மேலும் கொரோனா காலத்தை மனதில் வைத்து, அரசியல் கட்சிகள் பிரசார கூட்டம் நடத்துவது பற்றி பொருத்தமான முடிவு எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.

    மேலும், ஐகோர்ட்டு உத்தரவால் ஏற்பட்டுள்ள நேர இழப்பு தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் முறையிடுமாறு பிரதியுமான் சிங் தோமர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×