என் மலர்
செய்திகள்
X
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்
Byமாலை மலர்26 Oct 2020 5:00 AM IST (Updated: 26 Oct 2020 5:00 AM IST)
ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியது. வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story
×
X