search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி
    X
    இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

    இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி - திரிகோணமலையில் இன்று தொடங்குகிறது

    இந்திய - இலங்கை நாடுகளுக்கான ஸ்லிநெக்ஸ் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் ‘ஸ்லிநெக்ஸ்’ என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்லிநெக்ஸ்’ இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐ.என்.எஸ். கமோர்தா, ஐ.என்.எஸ். கில்டன் ஆகிய போர்க்கப்பல்கள் கலந்து கொள்கின்றன. இது தவிர, இந்திய போர்க்கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன. அதேபோல் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றன.

    இந்த கூட்டு பயிற்சி குறித்து இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரு தரப்பு கடற்படைகள் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த ‘ஸ்லிநெக்ஸ்’ கூட்டு பயிற்சி உதவும். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் இலக ரக விமானங்களின் திறனையும், இந்த கூட்டு பயிற்சி வெளிப்படுத்தும். ஆயுத பயிற்சி உட்பட பல பயிற்சிகளை இரு நாட்டு போர்க்கப்பல்களும் மேற்கொள்ள உள்ளன” என்றார்.

    இதற்கு முந்தைய ‘ஸ்லிநெக்ஸ்’ கூட்டு பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×