search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ஹத்ராஸ் கூட்டு பலாத்கார சம்பவம் கொடூரமானது - சுப்ரீம் கோர்ட் வேதனை

    ஹத்ராஸ் கூட்டு பலாத்கார சம்பவம் கொடூரமானது என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், பலியான பெண்ணின் குடும்பத்தையும், சாட்சிகளையும் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும், அல்லது சி.பி.ஐ, எஸ்.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங் ஆஜராகி, ‘ஹத்ராஸ் சம்பவம் குறித்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வழக்கு வெளிப்படையாக நடைபெறுமா? என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பான சாட்சிகள் பாதுகாக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர்.

    அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் உங்களுக்கு வழக்குரிமை இல்லாவிட்டாலும், ஹத்ராஸ் கூட்டு பலாத்காரம் கொடூரமான சம்பவம் என்பதால் விசாரிக்கிறோம்’ என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘இங்கு அனைவரும் நல்லெண்ணத்துடன் வழக்கு தொடுத்து இருந்தாலும், ஹத்ராஸ் சம்பவம் குறித்து பெருகி வரும் கட்டுக்கதைகளை தடுக்க வேண்டும். சாட்சிகளை காப்பாற்ற வேண்டுமென கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் உத்தரபிரதேச போலீசாரின் பாதுகாப்பில் உள்ளனர்’ என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், ‘ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்பதை மறுக்கமுடியாது, அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான சாட்சிகளை பாதுகாக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், பலியான பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆதரவாக வாதிட வக்கீல் நியமிக்கப்பட்டு உள்ளது குறித்தும் விரிவான பிரமாண பத்திரத்தை 8-ந்தேதிக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒருவார காலத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விசாரணை முறையாக நடைபெறுவது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
    Next Story
    ×