search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்விலாஸ் பஸ்வான்
    X
    ராம்விலாஸ் பஸ்வான்

    மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை - டெல்லி ஆஸ்பத்திரியில் நடந்தது

    மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை நடந்தது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகிப்பவர் ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74). இவர் லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனரும் ஆவார்.

    50 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் பஸ்வான், கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் டெல்லி ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக, பீகாரில் சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்த இருந்த லோக்ஜனசக்தி கட்சி தலைவரும், ராம்விலாஸ் பஸ்வான் மகனுமான சிராக் பஸ்வான், அதை ரத்து செய்து விட்டு அவசரமாக டெல்லி விரைந்தார்.

    அதைத் தொடர்ந்து பஸ்வானுக்கு இரவில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை தேறி வருகிறது.

    ராம்விலாஸ் பஸ்வான் உடல்நிலை குறித்து சிராக் பஸ்வானிடம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தனர்.

    ராம்விலாஸ் பஸ்வானுக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி மகன் சிராக் பஸ்வான் நேற்று கூறுகையில், “கடந்த பல நாட்களாக அப்பா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை (நேற்று முன்தினம் மாலை) திடீர் உடல்நல கோளாறுகள் காரணமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. தேவை ஏற்பட்டால், சில வாரங்களுக்கு பிறகு அவர் மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரலாம். இந்த கடினமான தருணத்தில் என்னோடும், எங்கள் குடும்பத்தினரோடும் சேர்ந்து நின்ற அனைருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×