search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன் எம்பி
    X
    மாநிலங்களவையில் பேசிய டிகேஎஸ் இளங்கோவன் எம்பி

    விவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

    விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

    விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்து உரையாற்றினார்.

    அப்போது, இந்த மசோதாக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (எம்.எஸ்.பி) எந்த தொடர்பும் இல்லை என்றும், எம்எஸ்பி முறை தொடரும் என்றும் அவர் கூறினார்.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்த்தனர். காங்கிரஸ் எம்பி பார்தாப் சிங் பஜ்வா பேசும்போது, தவறான அம்சங்களுடன் தவறான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாக்களை காங்கிரஸ் எதிர்ப்பதாக தெரிவித்தார். இந்த மசோதாக்களை காங்கிரஸ் நிராகரிப்பதாகவும், விவசாயிகளின் இந்த மரண உத்தரவில் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்றும் அவர் காட்டமாக பேசினார்.

    பிரதமர் மோடி விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டினார். 

    ‘விவசாயிளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்கு ஆக்குவதாக நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் தற்போதை விகிதத்தை பார்க்கையில் 2028-க்கு முன்னர் விவசாயிகளின் வரமானம் இரட்டிப்பாகாது. வாக்குறுதிகளை வழங்குவதற்கு உங்கள் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது’ என்றார் பிரையன்.

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 20 சதவீத பங்களிப்பை வழங்கும் விவசாயிகள், இந்த மசோதாவால் அடிமைகளாக மாற்றப்படுவார்கள் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பேசினார். இந்த மசோதா விவசாயிகளைக் கொன்று அவர்களை ஒரு பொருளாக மாற்றும் என்றும் குறிப்பிட்டார்.

    இந்த மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்துவதை ஆளும் கட்சி விரும்பவில்லை என தெரிகிறது. மத்திய அரசு எந்த ஒரு விவசாய சங்கத்தையும் ஆலோசிக்கவில்லை என்று சமாஜ்வாடி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் தெரிவித்தார்.
    Next Story
    ×