search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் பாதுகாப்பு
    X
    போலீஸ் பாதுகாப்பு

    ஆந்திராவில் தேர் தீப்பிடித்த விவகாரம்: போராட்டம் நடந்த வந்த பாஜக தலைவர்கள் கைது- பதற்றம்

    ஆந்திராவில் கோவில் தேர் தீயில் கருகிய சம்பவம், பல்வேறு இடங்களில் சாமி சிலைகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்களை மையமாக வைத்து அமலாபுரம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட பாஜக அழைப்பு விடுத்தது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான தேர், கடந்த 5ம் தேதி நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்து போனதால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். தேருக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இந்து கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜகவினர் குற்றம்சாட்டி அந்தர்வேதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கோவில் தேர் எரிப்பு, பல்வேறு இடங்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்களை மையமாக வைத்து அமலாபுரம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு இன்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட பாஜக அழைப்பு விடுத்திருந்தது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பாஜகவினர் அமலாபுரம் நோக்கி வரத் தொடங்கினர். வெளியில் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என்பதால், வணிகர்கள் முன்னெச்சரிக்கையாக கடைகளை அடைத்தனர்.

    ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அமலாபுரம் டிவிஷனில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஜக போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கும் மேலாக சேர்ந்து வந்தாலோ, ஆயுதங்கள் வைத்திருந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். விஜயவாடாவில் இருந்து அமலாபுரம் நோக்கி வந்த பலர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு ரெட்டி நேற்று இரவு அமலாபுரம் வந்தபோது, அவரை போலீசார் கைது செய்தனர். பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் அமலாபுரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
    Next Story
    ×