search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் காரை பயன்படுத்திய போலீஸ் அதிகாரியின் மனைவி
    X
    பறிமுதல் காரை பயன்படுத்திய போலீஸ் அதிகாரியின் மனைவி

    குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட காரை சொந்த தேவைக்கு பயன்படுத்திய போலீஸ் அதிகாரியின் மனைவி - காரின் உண்மையான உரிமையாளரிடம் வாக்குவாதம்

    குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரை போலீஸ் அதிகாரியின் மனைவி தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளார். இதை கண்டுபிடித்த காரின் உண்மையான உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
    அலகாபாத்:

    குஜராத் மாநிலம் ஜாம் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ்சிங் ஜடேஜா. இவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி தனது சொகுசு காரில் மதுபாட்டில்களை மறைத்து கொண்டுவந்துள்ளார். 

    அப்போது வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாவாட் பகுதி போலீசார் ஜடேஜாவின் காரையும் சோதனை செய்தனர். அதில் அவர் தனது காரில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தியதற்காக ஜடேஜா மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது காரும் கலாவாட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து ஜடேஜா ஜாமீன் பெற்று விடுதலையானார். ஆனால், வழக்கு நடைபெற்று வந்ததால் மது பாட்டில்கள் கடத்தப்பட்ட சொகுசு காரை ஜடேஜாவால் மீட்கமுடியவில்லை.

    தனது காரை மீட்பதற்கான முயற்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜடேஜா கலாவாட் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். ஆனால், அப்போது அவரின் சொகுசு கார் போலீஸ் நிலையத்தில் இல்லை.

    இதுபற்றி போலீசாரிடம் ஜடேஜா விசாரித்துள்ளார். ஆனால், போலீசாரோ ஜடேஜாவை உடனடியாக போலீஸ் நிலையத்தை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர்.

    இதையடுத்து, போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது கார் எங்கே சென்றது என தேடும் முயற்சியில் ஜடேஜா ஈடுபட்டார். 

    இந்நிலையில், தனது கார் நேற்று கலாவாட் பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்ட ஜடேஜா தனது வழக்கறிஞரின் உதவியுடன் மற்றொரு கார் மூலம் சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த தனது காரை இடைமறித்தார்.

    மேலும், அந்த காரில் யார் பயணித்தனர் என்பதை பார்க்க காரின் கதவை திறந்துள்ளார். அப்போது கலாவட் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    அப்போது தான் கலாவட் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரடதியா அவரது குடும்பத்தின் சொந்த பயனுக்காக தனது சொகுசு காரை கடந்த 1 மாதமாக பயன்படுத்தி வந்ததை ஜடேஜா அறிந்துள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த ஜடேஜா காரில் பயணம் செய்த சப் இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் இது தனது கார் எனவும் குற்றவழக்கில் போலீஸ் நிலையத்தில் இருந்த கார் உங்களின் சொந்த தேவைக்கு பயன்படுத்த அனுமதி கொடுத்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார். 

    இதனால் சப் இன்ஸ்பெக்டர் ரடதியாவின் மனைவிக்கும் அவர் பயணித்த காரின் உரிமையாளர் ஜடேஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.    

    இந்த சம்பவங்களை ஜடேஜா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் குஜராத் முழுவதும் வைரலாக பரவியது. 

    இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள ஜாம் நகர் மாவட்ட எஸ்.பி. ஷிவேதா குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரை தனது குடும்பத்தின் சொந்த தேவைக்கு பயன்படுத்திய கலாவட் போலீஸ் நிலையை சப் இன்ஸ்பெக்டர் ரடதியாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.   
    Next Story
    ×