search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பேச்சுவார்த்தை
    X
    ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பேச்சுவார்த்தை

    ரபேல் இணைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பேச்சுவார்த்தை

    இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி பிரான்ஸ் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    அம்பாலா:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.  இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் இதில் பங்கேற்றது. ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாகவும், ராணுவ ஒத்துழைப்புக்காக இணைந்து பணியாற்ற முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியாவில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்ய வரும்படி பிரான்ஸ் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானங்களை இணைக்கும் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது இரு நாடுகளிடையிலான உறவுகள் முன்னேறியிருப்பதை காட்டுவதாகவும் பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி கூறினார். 

    சமீபத்தில் சுகாதார நெருக்கடியை கையாள்வதில் இரு நாடுகளும் இணைந்து ஒற்றுமையை காட்டியதாகவும், பிரான்சில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியா அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி ஆதரவு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

    சமீபத்தில் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டதாகவும் பிளாரன்ஸ் பார்லி குறிப்பிட்டார்.
    Next Story
    ×