search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே
    X
    ரெயில்வே

    தனியார் ரெயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம் - பெட்டிகளில் இருக்க வேண்டிய வசதிகளை பட்டியலிட்டது, ரெயில்வே

    தனியார் ரெயில்களை இயக்குவது தொடர்பான கூட்டத்தில் 23 நிறுவனங்கள் பங்கேற்றன. தனியார் இயக்கும் ரெயில்களில் என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என்று ரெயில்வே பட்டியலிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தனியார் ரெயில்களை இயக்குவது தொடர்பான கூட்டத்தில் 23 நிறுவனங்கள் பங்கேற்றன. தனியார் இயக்கும் ரெயில்களில் என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என்று ரெயில்வே பட்டியலிட்டுள்ளது.

    குறிப்பிட்ட 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்குவதற்கு அனுமதிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகுக்கும்.

    தனியார் ரெயில்களை இயக்குவது தொடர்பாக விண்ணப்பிப்பதற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 23 நிறுவனங்கள் பங்கேற்றன.

    அவற்றில் பாம்பர்டியர், ஆல்ஸ்டம், சீமன்ஸ், ஜி.எம்.ஆர்., ஐ.ஆர்.சி.டி.சி, பெல், மேதா குழுமம், ஸ்டெர்லைட், ஜே.கே.பி. ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தனியார் நிறுவனங்கள், 2 கட்ட போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும்.

    இதற்கிடையே, தனியார் இயக்கும் ரெயில்களில் என்னென்ன வசதிகள் இடம் பெற வேண்டும் என்பது பற்றிய வரைவு அறிக்கையை ரெயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தனியார் இயக்கும் ரெயில்கள், சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 180 கி.மீ. வரை ஓடும் வகையில் இருக்க வேண்டும். வழக்கமான ஓட்டத்தின்போது, மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட வேண்டும். புறப்பட்ட 140 நொடிகளில் இந்த வேகத்தை எட்ட வேண்டும்.

    அந்த வேகத்தில் ஓடும்போது, அவசரகால பிரேக்கை அழுத்தினால், 1,250 மீட்டருக்கும் குறைவான தூரத்துக்குள் ரெயில் நிற்கும்படி இருக்க வேண்டும். 35 ஆண்டுகால ஆயுட்காலம் கொண்டதாக ரெயில்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

    ரெயில் பெட்டியின் ஒவ்வொரு பக்கத்திலும் மின்சாரத்தால் இயங்கும் 2 கதவுகளாவது பொருத்தப்பட வேண்டும். எல்லா கதவுகளும் மூடினால்தான், ரெயிலை இயக்க முடியும் என்ற அளவுக்கு பாதுகாப்பு அம்சம் இருக்க வேண்டும். அவசர காலத்தின்போது, ரெயிலில் இருந்து பயணிகள் கதவை திறந்து வெளியேறும் வசதி இருக்க வேண்டும்.

    சன்னல்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கதவுகள் இருக்க வேண்டும். தொந்தரவு இல்லாத பயணமாக அமைய வேண்டும். ரெயில்களில் சத்தம், அதிர்வுகள் குறைவாக இருக்க வேண்டும். போதிய கைப்பிடி பொருத்த வேண்டும்.

    சாதாரண, அவசர கால சாதனங்களை எப்படி இயக்க வேண்டும் என்பதை படத்துடன் எழுதி வைக்க வேண்டும். அவசரகால குறியீடுகள், பார்வையற்றவரும் உணரும்வகையில் ‘பிரெய்லி முறையில் அமைக்க வேண்டும்.

    என்ஜின் டிரைவரும், கார்டும் பயணிகளுக்கு அறிவிப்புகள் செய்வதற்காக, ஒலிபெருக்கி வசதி இருக்க வேண்டும். அவசரகால பொத்தான்கள், டிரைவர், கார்டுடன் பேச தொலைபேசி வசதி ஆகியவை கதவு அருகே பொருத்தப்பட வேண்டும்.

    ரெயில் பெட்டிகளின் இருபுறமும் ரெயில் புறப்படும், சேரும் இடம் பற்றிய அறிவிப்பு இடம் பெற வேண்டும். பெட்டிகளுக்கு உள்ளேயும் இந்த தகவல் இடம் பெற வேண்டும். உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளில் தலா 6 கண்காணிப்பு கேமராக்களும், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் தலா 2 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட வேண்டும்.

    டிரைவர் அமரும் அறை, அதன் மேல் பகுதி, ரெயிலின் பக்கவாட்டு பகுதி ஆகிய இடங்களிலும் தலா ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×