search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்: இலவச இணையதள வசதி கோரிய வழக்கு தள்ளுபடி

    ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் இலவச இணையதள வசதி கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த வக்கீல் மனோகர் பிரதாப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்போன் மற்றும் ‘வீடியோ கால்’ வழியாக பேசி பொழுதை போக்கி வருகின்றனர்.

    எனவே இலவசமாக அளவற்ற தொலைபேசி அழைப்புக்கள், இணையதள வசதி வழங்க மத்திய அரசுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துவதால் மக்களுக்கு மனரீதியாக ஏற்படும் பாதிப்புக்களை களைவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். விசாரணை துவங்கியதும் “ஏன் இது போன்ற மனுக்கள் எல்லாம் தாக்கல் செய்யப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
    Next Story
    ×