search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஊரடங்கு குறித்து முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை

    ஊரடங்கை விலக்குவதா? அல்லது நீட்டிப்பதா? என்பது குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மார்ச் 20-ந்தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அவர் 3 முறை முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்து இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த 11-ந்தேதி முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து 14-ந்தேதி, ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

    நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

    கிராமப்புறங்களில் வணிக வளாகங்கள் அல்லாத பிற கடைகளை திறக்க கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடைகளை திறக்க தடை விதித்து இருக்கிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஊரடங்கின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் வேகம் குறைந்துள்ள போதிலும், அது பரவுவதை முற்றிலுமாக தடுத்துநிறுத்த முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது.

    மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரின் நடுப்பகுதியில் தேசம் இருப்பதாகவும், எனவே முன்னெச்சரிக்கையுடன் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், மே 3-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக சில மாநிலங்கள் அறிவித்து உள்ளன.

    இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) காலை மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது இது 3-வது முறையாகும்.

    முதல்-மந்திரிகளுடனான கலந்துரையாடலின் போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும், ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? ஊரடங்கு காலத்துக்கு பின்னரும் என்னென்ன கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்தும் அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது.
    Next Story
    ×