search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட வங்காளதேச சட்டவிரோத குடியேறிகள்
    X
    கைது செய்யப்பட்ட வங்காளதேச சட்டவிரோத குடியேறிகள்

    மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள் உள்பட 22 வங்காளதேசத்தினர் கைது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள் உள்பட 22 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
    மும்பை:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதனால் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.  

    இதற்கிடையில், அசாமை போன்றே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் தற்போது அமலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பலர் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பல்ஹரி நகரம் அர்னலா பகுதியில் உள்ள ரஜோடி கிராமத்தில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கிராமத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

    அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி அப்பகுதியில் தற்காலிக குடிசைகள் அமைத்து குடியிருந்த 12 பெண்கள் உள்பட 22 வங்காளதேச நாட்டினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

    கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் நடைபெறும் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக சென்று பணம் சம்பாதித்துவந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.      

    Next Story
    ×