search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி வைத்து தகர்க்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு
    X
    வெடி வைத்து தகர்க்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு

    கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மேலும் இரு அடுக்குமாடி கட்டிடங்கள் தகர்ப்பு

    கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதற்காக மேலும் இரு அடுக்குமாடி கட்டிடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. எச் 2 ஓ ஹோலி பெய்த் (19 மாடி), ஆல்பா செரீன் (16 மாடி), ஜெயின் கோரல் கோவ் (17 மாடி) மற்றும் கோல்டன் காயலோரம் (17 மாடி) என பெயரிடப்பட்ட இந்த கட்டிடங்களில் 350-க்கும் அதிகமான வீடுகள் இருந்தன. மொத்தம் 240 குடும்பங்கள் இந்த 4 கட்டிடங்களிலும் தங்கி இருந்தனர்.

    இந்த கட்டிடங்கள் அனைத்தும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு, 4 கட்டிடங்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கு வீடு வாங்கியவர்களுக்கு ரூ.25 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

    இதனை தொடர்ந்து கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை அக்டோபர் 18-ந் தேதி முதல் கேரள அரசு மேற்கொண்டது. கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பதற்காக கடந்த ஒரு மாதமாக அவற்றில் வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து 2 கட்டிடங்களை நேற்று இடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று பகல் 11.17 மணி அளவில் எச் 2 ஓ ஹோலி பெய்த் கட்டிடம் முதலில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பின்னர் சில நிமிட இடைவெளியில் ஆல்பா செரீன் கட்டிடமும் தகர்க்கப்பட்டது. இடிபாடுகள் மீது தண்ணீரை பீய்ச்சி புழுதி கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய இரு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. கட்டிடங்கள் இடிப்பு பணியில் சுமார் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×