search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

    வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நிதி அமைச்சக கூட்டம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய வங்கிகள் சங்கம், சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முக்கியமாக வங்கி மோசடிகளை தவிர்ப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது நிர்மலா சீதாரமன் கூறியதாவது:-

    வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். எடுக்கப்படும் விவேகமான வர்த்தக முடிவுகள் நிச்சயம் பாதுகாக்கப்படும். உண்மையான, நேர்மையான முடிவுகள் எடுக்கும்போது சி.பி.ஐ., மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கை அலுவலர் ஆகிய 3 ‘சி’க்களுக்கு வங்கி அதிகாரிகள் காரணம் இல்லாமல் பயப்பட தேவையில்லை.

    அரசு எடுக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் வங்கிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவும். அரசால் எடுக்கப்படும் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் வங்கிகளை மீட்டெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.பி.ஐ. இயக்குனர் கூறும்போது, ‘‘வங்கிகள் எந்த அச்சத்தையும் தணிக்க அதுதொடர்பான ஆலோசனைகளை எங்களிடம் பெறலாம்’’ என்றார்.

    அங்கீகரிக்கப்படாத தகவல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக சி.பி.ஐ. ஒரு நடைமுறையை வகுக்க வேண்டும். இதற்காக சி.பி.ஐ. அனுப்பும் நோட்டீசுகளில் ஒரு பதிவு எண்ணும் இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வங்கி மோசடிக்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்போது உண்மையான வர்த்தக தோல்விகள் மற்றும் குற்றத்துக்குரிய சம்பவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை சி.பி.ஐ.யும் உணர வேண்டும்.

    அதேபோல பொதுத்துறை வங்கிகள் மோசடி சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ.க்கு ஒரு குறிப்பிட்ட இமெயில் முகவரியில் புகார்களை அனுப்பலாம்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கிகள் கையகப்படுத்தும் சொத்துகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் ஆன்லைனில் ஏலம் விடுவதற்காக eBkray என்ற இணையதள முகவரியையும் தொடங்கிவைத்தார்.

    பொதுத்துறை வங்கிகள் கடந்த 27-ந் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் சொத்துகளை இந்த ஆன்லைனில் ஏலம் விடும் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. கடந்த 3 நிதி ஆண்டுகளில் வங்கிகள் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடி என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×