search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டல பூஜையையொட்டி அய்யப்பனை தரிசிக்க சபரிமலையில் இருமுடி கட்டுடன் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்
    X
    மண்டல பூஜையையொட்டி அய்யப்பனை தரிசிக்க சபரிமலையில் இருமுடி கட்டுடன் குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை - நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை நடந்தது. இதனையொட்டி அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
    சபரிமலை:

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தன.

    மண்டல பூஜையின் போது, சபரிமலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது கோவிலில் சிறப்பம்சமாக கருதப்படும். அதாவது, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி அணிவிக்கப்படும்.

    இந்த தங்க அங்கி ஊர்வலமாக நேற்றுமுன்தினம் மாலை சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தங்க அங்கி 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

    மண்டல பூஜையையொட்டி நேற்றுமுன்தினத்தில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் அங்கு குவிய தொடங்கினர். நேற்று மண்டல பூஜைக்காக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று சரண கோஷம் எழுப்பினர். இந்த கோஷம் விண்ணதிரும் வகையில் இருந்தது.

    தொடர்ந்து காலை 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணி முதல் 11.40 மணி வரையிலான கும்ப ராசி வேளையில் அய்யப்பனுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது.

    ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குவிந்ததால், வழக்கத்தை விட பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மண்டல பூஜையையொட்டி கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக் கப்பட்டு சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இதனையடுத்து மகர விளக்கு பூஜைக்காக 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். அன்று முதல் தினமும் பூஜை நடைபெறும். மேலும் மகர விளக்கு பூஜை வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது.
    Next Story
    ×