search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா, பிரதமர் மோடி, ஜேபி நட்டா
    X
    அமித் ஷா, பிரதமர் மோடி, ஜேபி நட்டா

    மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் ஒடிவிட்டனர் - சிவசேனா

    மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் ஒடிவிட்டனர் என பாஜகவை மறைமுகமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 105 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. 

    இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் ஆட்சியில் சிவசேனா சமபங்கு கேட்டதால் பாஜக-சிவசேனா கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இந்த சூழலில் மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்பின்போது அனைவரும் ஏற்கும் வகையிலான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

    இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை என சரத்பவார் தெரிவித்தார்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இன்று இரவு 8.30 மணியளவில் சந்தித்தார். 

    இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது எங்கள் பொறுப்பல்ல, அந்த பொறுப்பில் இருந்தவர்கள் ஒடிவிட்டனர். ஆனால் மகாராஷ்டிராவில் விரைவில் நாங்கள் ஆட்சியமைப்போம் என நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தார். சிவசோனா மூத்த தலைவரின் இந்த கருத்து பாஜகவை மறைமுகமாக சாடும் விதமாக உள்ளது என கருத்துக்கள் வெளியாக வருகிறது. 
    Next Story
    ×