
இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிமுகம் காட்டி வருகிறார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’அதிபர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்! நமது இருநாடுகள், நாடுகளின் மக்களுடனான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையிலும், நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மேம்படும் வகையிலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
மேலும், இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்திக்கு உடனடியாக கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.