search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் காவலரை சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    பெண் காவலரை சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    விழாவில் தடுமாறி விழுந்த பெண் காவலர் - உதவிக்கு மேடையில் இருந்து விரைந்து வந்த ஜனாதிபதி

    டெல்லியில் இன்று நடைபெற்ற ஒரு விழாவின்போது கீழே விழுந்த பெண் காவலருக்கு உதவி செய்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நிர்மலா சீதாரமன் ஆகியோர் மேடையில் இருந்து இறங்கி வந்தனர்.
    புதுடெல்லி:

    சமூக பொறுப்புள்ள தனியார் நிறுவனங்களுக்காக நாடு தழுவிய அளவில் புதிய விருது ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இந்த ஆண்டுக்கான முதல் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதித்துறை இணை மந்திரி அணுராக் தாக்குர் அரசு உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

    குடிநீர் அளித்து உதவிய அணுராக் தாக்குர்

    விருதுகள் வழங்கி பின்னர் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் பாதுகாவலர் திடீரென்று தடுமாறி சாய்ந்து கீழே விழுந்தார்.

    இதை மேடையின் மீது இருந்தவாறு கவனித்துவிட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கீதம் முடிந்ததும் அந்த பெண் காவலர் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றார். நிர்மலா சீதாராமன், அணுராக் தாக்குர் ஆகியோரும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

    கீழே விழுந்த பெண் காவலரை சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரிடம் நலம் விசாரித்தார்.

    மத்திய நிதித்துறை இணை மந்திரி அணுராக் தாக்குர் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை தந்து அருந்த வைத்தார். நிர்மலா சீதாராமனும் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

    இந்த காட்சியை கண்டு விழா அரங்கத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். ஜனாதிபதி அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது மரபுகளை மீறி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவரது பெருந்தன்மையை பாராட்டி அவர்கள் கரவொலி எழுப்பினர்.
    Next Story
    ×