search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷ்மா சுவராஜ்
    X
    சுஷ்மா சுவராஜ்

    சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்

    மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். அவர் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதற்கிடையில், சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சமயத்தில் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கைது செய்து மரண தண்டனை விதித்தது. சர்வதேச நீதிமன்றத்தின் உதவியுடன் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யப்பட்டு இந்திய தூதர் குல்பூஷண் ஜாதவை சந்திக்கவும் அனுமதியும் கிடைத்தது.

    சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக இந்தியா சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே. அவர் இந்த வழக்கிற்கு ஊதியமாக ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

    சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடன் (ஆகஸ்ட் 6)  தொலைபேசியில் பேசிய போது "உங்கள் சம்பளமான ஒரு ரூபாயை நாளை மாலை 6 மணிக்கு சந்தித்து பெற்றுக்கொள்ளுங்கள்’’ என கூறினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்து விட்டார் சென்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை என ஹரிஷ் சால்வே ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.  

    ஹரிஷ் சால்வேவிடம் ஒரு ரூபாய் வழங்கிய பன்சூரி சுவராஜ்  

    இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தனது தாயின் கடைசி ஆசையான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு வழங்க வேண்டிய ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.

    இதுகுறித்து சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் குஷால் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ''பன்சூரி இன்று உனது கடைசி ஆசையான குல்பூஷன் ஜாதவ் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு வழங்கவேண்டிய ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கி கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார். 
    Next Story
    ×