search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைத்ரிபாலா சிறிசேனா
    X
    மைத்ரிபாலா சிறிசேனா

    ஈஸ்டர் தாக்குதல் - உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து இலங்கை அதிபர் உத்தரவு

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று சுமார் 250 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு உயர்மட்ட குழு விசாரணைக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

    இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் சுமார் 100 பேரை கைது செய்து விசாரித்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

    தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்திருந்தார்.

    சேதமடைந்த தேவாலயம்

    இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில் ’கொழும்புவில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என இந்திய அரசின் உளவுத்துறை எச்சரித்து இருந்ததை போலீசார் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்தனர்’ என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தற்போது உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை அரசின் தகவல்துறை வெளியிட்ட அறிக்கையில்' புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விசாரணை குழுவில் மேல்முறயீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக, உடந்தையாக இருந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பாக அரசுக்கு அடையாளம் காட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு குழு இன்னும் 6 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×