search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிளாஸ்டிக்குக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது - ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருளுக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐ.நா. மாநாடு, டெல்லி அருகே உள்ள நொய்டாவில் நடந்து வருகிறது. 197 நாடுகளின் பிரதிநிதிகள், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 13-ந் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது.

    நேற்று இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    பருவநிலை மாறுபாடு என்பது நிலத்தின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. கடல் மட்டம் உயர்வு, கடல் சீற்றம், தவறிய மழைப்பொழிவு, புயல், புழுதி புயல் போன்ற காரணங்களாலும் நிலம் சிதைகிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், நிலச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்தியா, 2030-ம் ஆண்டுக்குள் 21 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த நிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை 26 மில்லியன் ஹெக்டேர் நிலங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

    இந்தியாவின் மரங்கள் மற்றும் வனப்பரப்பு, கடந்த 2 ஆண்டுகளில், 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் வீணாகிறது. இதை கவனிக்காமல் போனால், நிலம் மலடாக மாறுவதுடன், விவசாயத்துக்கு பயனற்றதாகி விடும். ஆகவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. வரும் ஆண்டுகளில், அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    அதுபோல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ் டிக் பொருட்களுக்கு உலகமும் தடை விதிக்கும் நேரம் வந்து விட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்த இந்தியாவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிதைந்த நிலங்களுக்கு தீர்வு காணும்போது, தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தண்ணீர் வினியோகத்தை பெருக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நீர் மேலாண்மையில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

    உலகளாவிய தண்ணீர் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவில், நீர் மேலாண்மைக்காக ‘ஜல் சக்தி’ அமைச்சகம் தொடங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்க திட்டம் வகுத்துள்ளோம். 21 கோடிக்கு மேற்பட்ட மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்த்து விட்டு, பசுமை உரங்கள் பயன்பாட்டை அதிகரித்து வருகிறோம்.

    இந்தியர்களாகிய நாங்கள், பூமியை எப்போதும் தாயாக, புனிதமானதாக கருதுகிறோம். மன்னிப்பு கேட்பதற்கு பூமியை தொட்டு வணங்குகிறோம். வானம், பூமி, தண்ணீர் இவற்றுக்காக வேண்டிக்கொள்வோம். இவையெல்லாம் செழிப்பாக இருந்தால், நாமும் செழிப்பாக இருப்போம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×