search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி எஸ்.பி. அன்புராஜன் சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்த காட்சி.
    X
    திருப்பதி எஸ்.பி. அன்புராஜன் சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்த காட்சி.

    கடத்தப்பட்ட 3 வயது சிறுமியை 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

    திருப்பதி ரெயில் நிலையம் அருகேயுள்ள சினிமா தியேட்டரில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுமியை போலீசார் 6 மணி நேரத்தில் மீட்டனர்.
    திருப்பதி:

    திருப்பதி கொர்ல பல்லியை சேர்ந்தவர் பவன்குமார் (32). இவரது மனைவி ரேகாபிரியா. தம்பதிக்கு 3 வயதில் பாக்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    பவன்குமார், ரேகாபிரியா இருவரும் திருப்பதி ரெயில் நிலையம் அருகேயுள்ள சினிமா தியேட்டரில் வேலை செய்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் சினிமா தியேட்டரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்களது குழந்தை பாக்யஸ்ரீ தியேட்டர் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் தியேட்டருக்குள் சென்று குழந்தையை கடத்தி சென்று விட்டார்.

    பவன்குமார் தம்பதி வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். கணவன், மனைவி இருவரும் ரெயில் நிலையம், பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் மகனை தேடினர்.

    இதையடுத்து திருப்பதி கிழக்கு போலீசில் புகார் அளித்தனர். திருப்பதி எஸ்.பி.அன்புராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. முரளிகிருஷ்ணா, இன்ஸ்பெக்டர் சிவபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசந்திரா, நாகேந்திர பிரசாத் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் பாக்யஸ்ரீயை தூக்கி கொண்டு சித்தூர் செல்லும் பஸ்சில் ஏறிய காட்சி பதிவாகி இருந்தது.

    இதையடுத்து உஷாரான போலீசார் சிறுமி கடத்தல் குறித்தும் வாலிபரின் அங்க அடையாளங்களை சித்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சித்தூர் போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். வாலிபர் ஒருவர் சிறுமியை தூக்கி செல்லும் காட்சியும், சிறிது நேரத்தில் வாலிபர் மட்டும் வேலூர் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சி பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் பஸ் நிலையம் அருகேயுள்ள தெருக்களில் சிறுமியை தேடினர். அப்போது மிட்டூர் என்ற இடத்தில் குழந்தை அழுது கொண்டிருப்பது தெரிய வந்தது.

    சிறுமியை மீட்டு திருப்பதி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.பி. அன்புராஜன் சிறுமியை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். கண்ணீர் மல்க மகளை பெற்றுக்கொண்ட பெற்றோர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சிறுமியை கடத்திய வாலிபர் வேலூர் பஸ்சில் ஏறி சென்றதால் அவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×