search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லப்பட்ட கெவின் ஜோசப். குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த காட்சி (பழைய படம்).
    X
    கொல்லப்பட்ட கெவின் ஜோசப். குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த காட்சி (பழைய படம்).

    கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை- 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

    கோட்டயம் அருகே கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள நட்டாசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கெவின் ஜோசப் (வயது 24).

    இவரும் பத்தனம் திட்டாவைச் சேர்ந்த சாக்கோ ஜான் என்பவரின் மகள் நீனுவும் ஒரே கல்லூரியில் படித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கெவின் ஜோசப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு நீனுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும், நீனுவும் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது நீனுவின் குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    மறுநாள் கெவின் ஜோசப்பும், நீனுவும் அவர்களது வீட்டில் இருந்தனர். அப்போது நீனுவின் சகோதரர் ஷானுசாக்கோ தலைமையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கெவின் ஜோசப்பை கடத்திச் சென்றனர். அவர்கள் கெவின் ஜோசப்பை கொலை செய்து தென்மலை அருகே சாலியக்கரை ஆற்றில் வீசிச் சென்றனர்.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக நீனுவின் அண்ணன் ஷானுசாக்கோ, தந்தை சாக்கோஜான் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோட்டயம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில் கெவின் ஆணவக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

    இந்த வழக்கு கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கெவின்ஜோசப் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீனுவின் தந்தை சாக்கோ ஜான் உள்ளிட்ட 4 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

    நீனுவின் சகோதரர் ஷானுசாக்கோ, நியாஸ் மோரன், இஷான் இஸ்மாயில், ரியாஸ், மனு, ஷெபின், நிஷாத், பசில், ஷானு ஷாஜகான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 24-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றவாளிகளின் வயது, எதிர்காலம் கருதி அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்தரப்பு வக்கீல்கள் வாதாடினர். இதன் காரணமாக தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    அபராத தொகையில் கொல்லப்பட்ட கெவின் மனைவி நீனுவுக்கும், கெவினின் தந்தை ஜோசப்புக்கும் தலா ரூ.1½ லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீதி உள்ள ரூ.1 லட்சத்தை கெவினின் நண்பர் அனிசுக்கும் கொடுக்க உத்தரவிடப்பட்டது.

    Next Story
    ×