search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரதுல்பூரி
    X
    ரதுல்பூரி

    மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் உறவினர் கைது - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

    ரூ. 354 கோடி வங்கி கடன் மோசடி செய்தது தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் உறவினரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச முதல்- மந்திரி கமல்நாத்தின் உறவினர் ரதுல்பூரி.

    இவரும், இவரது குடும்பத்தினரும் “மோசர் பேர்” என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் டி.வி.டி, சி.டி. போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயார் செய்து வருகிறது.

    ரதுல்பூரி இந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு முதல் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் வங்கி கடன்களை அவரும், அவரது குடும்பத்தினரும் ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லை.

    குறிப்பாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 354 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லை. மேலும் முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து அவரும், அவரது குடும்பத்தினரும் வங்கிகளில் கடன் பெற்று இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரதுல்பூரி மற்றும் அவரது குடும்பத்தினர் தீபக்பூரி, ரீட்டா பூரி, சஞ்சய்செயின், வினித்சர்மா ஆகியோர் மீது வங்கிகள் புகார் மனு அளித்தன. அதன் பேரில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    அப்போது ரதுல்பூரி பல ஆயிரம் கோடி ரூபாயை பணபரிமாற்றம் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளும் ரதுல்பூரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ரதுல்பூரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி வேட்டை நடத்தினார்கள். மொத்தம் 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    அப்போது ரதுல்பூரி குடும்பத்தினர் முறைகேடுகள் செய்து இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. மேலும் ஹெலிகாப்டர் ஊழலில் ரதுல் பூரிக்கு தொடர்பு இருப்பதை தெரிவிக்கும் சில ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

    இதையடுத்து ரதுல்பூரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர். அவரை தனி இடத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிகாரிகளின் விசாரணை தன்னை நெருங்குவதை அறிந்த ரதுல்பூரி கடந்த சனிக்கிழமை டெல்லி கோர்ட்டில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தெரிய வந்துள்ளது. அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஹெலிகாப்டர் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரதுல் பூரி அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×