search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு- மம்தா பானர்ஜி

    நேதாஜி சுபாஷ் சுந்திரபோசுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
    கொல்கத்தா :

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    1945-ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்டு 18-ந் தேதி), நேதாஜி தைவானில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் விமானம் ஏறினார். அதன் பிறகு அவர் காணாமல் போய் விட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் நமக்கு தெரியவில்லை.

    இந்த மண்ணின் மாபெரும் மைந்தனான அவரைப்பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    அதிகாரப்பூர்வ ஆவணங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு, இந்த நாளில் (ஆகஸ்டு 18-ந் தேதி) ‘மிட்சுபிஷி கி-21’ கன ரக போர் விமானத்தில் பயணம் செய்ததாகவும், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும் கூறுகின்றன.

    நேதாஜி

    ஆனால் நேதாஜி பற்றிய முகர்ஜி கமிஷன் 2005-ம் ஆண்டு அளித்த அறிக்கையில், சுபாஷ் சந்திரபோஸ் சோவியத் ரஷியாவுக்கு தப்பி விட்டார் என்பதை மறைக்கத்தான் விமான விபத்து கதை கூறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்து விட்டது.

    ஆனால் 1985-ம் ஆண்டு வரையில் உத்தரபிரதேச மாநிலம், பைசாபாத்தில் வாழ்ந்த கும்னாமி பாபாதான் சுபாஷ் சந்திர போஸ் என்று இன்னும் நம்புகிற மக்கள் நமது நாட்டில் உள்ளனர்.

    இதற்கிடையே 2016-ம் ஆண்டு, நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, நேதாஜி பற்றிய ஜப்பான் அரசின் விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில் நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இருப்பினும், நேதாஜி விமான விபத்தில் உயிர் பிழைத்து, சில காலம் மறைந்து வாழ்ந்தார் என்றும் ஒரு தரப்பினர் நம்புகின்றனர். 
    Next Story
    ×