search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா
    X
    பிரியங்கா

    குல்தீப் செங்கார் போன்றவர்களுக்கு பாதுகாப்பு எதற்கு? -பிரியங்கா கடும் தாக்கு

    உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுத்திருந்த பெண் கார் விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. இதில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

    விபத்துக்குள்ளான கார்

    இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் உன்னாவ் பலாத்காரம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், " பலாத்காரத்துக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட பெண் கைவிடப்பட்ட நிலையில் உயிருக்குத் தனியாக போராடிக் கொண்டிருக்கும்போது, குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குல்தீப் செங்கார் போன்றோருக்கு எதற்காக அரசியல் பாதுகாப்பும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கிறார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள் என்று முதல்தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு செய்யப்பட்ட விபத்து என்றுகூட குறிப்பிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×