search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.டி. குமாரசாமி
    X
    எச்.டி. குமாரசாமி

    உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் -குமாரசாமி

    கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியை தழுவினார். இது குறித்து பேசுகையில் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் என குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

    2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக உள்ளனர்.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 15 அதிருப்தியாளர்களை சமரசம் செய்ய குமாரசாமியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

    ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் குமாரசாமி

    சட்டபேரவையில் பலம் இழந்ததை தொடர்ந்து, முதல் மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.  ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார் குமாரசாமி.

    இதையடுத்து, முதல் மந்திரி குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது என ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.

    இது குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் என்பதை உணர்கிறேன். இதனால் நான் ஓய்வு பெறமாட்டேன். தொடர்ந்து போராடுவேன். பொறுத்திருந்து பாருங்கள்' என கூறினார். 
    Next Story
    ×