search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2
    X
    விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2

    இஸ்ரோவின் மைல்கல் சாதனை - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம்  இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது.

    அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

    அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

    ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.

    தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.

    சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

    சந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் ‘கிரயோஜெனிக்’ படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன.

    பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது.

    பாய்வதற்கு தயார்நிலையில் சந்திராயன் 2

    இதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2’ வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

    ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
    Next Story
    ×