search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1,640 கோடி மோசடி: தலைமறைவான நகைக்கடை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    ரூ.1,640 கோடி மோசடி: தலைமறைவான நகைக்கடை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

    பொதுமக்கள் பணம் ரூ.1,640 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பெங்களூரு நகைக்கடை அதிபர் தன்னிடம் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் பணம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெங்களூரு :

    பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான்.

    இவர் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்து கொண்டு தலைமறைவானார். இந்த வேளையில் அவர் சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் தன்னிடம் ரூ.400 கோடி வாங்கி கொண்டு திரும்ப தரவில்லை எனக்கூறி ஆடியோ வெளியிட்டார். அத்துடன் தான் தற்கொலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் தலைமறைவான மன்சூர்கான் தற்போது துபாயில் பதுங்கி உள்ளார். அவர் மீது கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுவரை மன்சூர்கான் மீது 45 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகி உள்ளன. அதன்படி மன்சூர்கான் ரூ.1,640 கோடி மோசடி செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு, விசாரணை நடத்தி மன்சூர்கானை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் தொடர்ந்து பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். இதனால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இந்த மோசடி தொடர்பாக மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையின் இயக்குனர்கள் 12 பேர் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மன்சூர்கானின் வீடு, அவருடைய 3-வது மனைவியின் வீடு, நகைக்கடையின் இயக்குனர்களின் வீடுகள் மற்றும் மன்சூர்கானின் நகைக்கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.55 கோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

    இதற்கிடையே, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் மன்சூர்கானை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் மத்திய உளவுத்துறை சார்பில் ‘ப்ளு கார்னர்’ நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இது அவரை கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொண்டு வர வாய்ப்பாக இருக்கும் மேலும் அவருடைய பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் துபாயில் இருந்தபடியே நேற்று மன்சூர்கான் தான் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ 12 நிமிடங்கள் ஓடுகிறது. அந்த வீடியோவில், ‘முன்னாள் எம்.பி. ரகுமான் கான், முகமது உபேதுல்லா ஷெரீப், ரியல் எஸ்டேட் அதிபர் பைரோஸ் உபேதுல்லா உள்பட நகைக்கடை அதிபர்கள், தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களை கூறும் மன்சூர்கான், அவர்கள் அனைவரும் எனது நிறுவனத்தை மூடி, என்னை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு அவர்களுக்கு நன்றி என்று கூறி மன்சூர்கான் பேச்சை தொடங்குகிறார். மேற்கொண்டு மன்சூர்கான் கூறியதாவது:-

    என்னிடம் அரசியல்வாதிகளும், எனது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களும் அதிக பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை அளித்தனர். இவர்களிடம் இருந்து தப்பிக்கும் வகையில் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இதனால் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளேன். வீடியோவில் குறிப்பிட்ட அனைத்து நபர்களும் என்னிடம் இருந்து பணம் பெற்று கொண்டுள்ளனர்.

    12 ஆண்டுகளாக எனது நிறுவனத்துக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. கடின உழைப்பால் நல்ல பெயருடன் வளர்ந்த எனது நிறுவனத்துக்கு தொழில்அதிபர்கள், அரசியல்வாதிகள் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அவப்பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த செயலில் ஈடுபடும் நபர்களுக்கு ‘அல்லா’ நல்ல தீர்ப்பு கொடுப்பார்.

    அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் என்னுடன் பணி செய்பவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால் பாதுகாப்பு கருதி நான் எனது குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறினேன். கடந்த 15-ந் தேதி மீண்டும் இந்தியா வர முடிவு செய்து விமான நிலையத்துக்கு சென்றேன். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் என்னை இந்தியாவுக்கு வருவதை தடுத்து விட்டனர். டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது. அப்போது தான் பெங்களூருவை விட்டு வெளியேறியது தவறு என்பதை உணர்ந்தேன்.

    கடந்த 13 ஆண்டுகளாக எனது நிறுவனத்தின் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. எனக்கு மொத்தம் ரூ.1,350 கோடி சொத்து உள்ளது. இந்த சொத்தை விற்பனை செய்து பொதுமக்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கிறேன். சி.பி.ஐ. விசாரணைக்கும், சட்ட நடவடிக்கைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.

    கடந்த 13 ஆண்டுகளாக நான் யாரையும் மோசடி செய்யவில்லை. ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தேன். 7 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினேன். இவ்வாறு உதவி செய்தாலும் கூட எனக்கு யாரும் கருணை காட்டவில்லை. இந்தியாவில் எனக்கு தொல்லை கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

    இன்னும் பெரும் புள்ளிகளின் பெயர்கள் உள்ளது. அவர்களின் பெயர்களை வெளியிட்டால் எனது குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படலாம். நான் இந்தியாவுக்கு வந்தால் என்னையும் கொலை செய்ய வாய்ப்புள்ளது. எனது வாயை மூடுவதற்கான செயல்களையும் சிலர் மேற்கொண்டு வருகிறார்கள். எனக்காக நான் இந்தியா வரவில்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு வருகிறேன்.

    நான் இந்தியா வர அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் உதவி செய்ய வேண்டும். எனது பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் சாட்சியாக அளிக்கிறேன். எனக்கு தொல்லை அளித்தவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

    தலைமறைவாக இருக்கும் நகைக்கடை அதிபர் மன்சூர்கான் வெளியிட்டு உள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்சூர்கான் வீடியோ வெளியிட்டது குறித்து, அவர் மீதான மோசடி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு அதிகாரி (துணை போலீஸ் கமிஷனர்) கிரீஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வீடியோ வெளியிட்டுள்ள மன்சூர்கான் குற்றவாளியாக இருக்கிறார். அவர் வீடியோ வெளியிட்டு சிலருடைய பெயர்களை கூறி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மன்சூர்கான் இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

    இவ்வாறு கிரீஷ் கூறினார்.
    Next Story
    ×