search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா மன்னிப்பு கேட்டால் பணிக்கு திரும்ப தயார்- போராடும் டாக்டர்கள் அறிவிப்பு
    X

    மம்தா மன்னிப்பு கேட்டால் பணிக்கு திரும்ப தயார்- போராடும் டாக்டர்கள் அறிவிப்பு

    வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டுமானால் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    கொல்கத்தா: 

    கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கு அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று  சென்றபோது, தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி டாக்டர்கள் கோஷம் எழுப்பியதால் அவர் கோபமடைந்தார்.

    இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத  பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 



    இதேபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மும்பை, கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் திங்கட்கிழமை வரை தொடரும் என அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் திங்கட்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டுமானால் மருத்துவர்களை மிரட்டும் தொனியில் பேசிய மம்தா மன்னிப்பு  கேட்க வேண்டும்.  உள்ளிட்ட 6 நிபந்தனைகளை டாக்டர்கள் முன்வைத்துள்ளனர். 
    Next Story
    ×