search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் பயணம்
    X

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் பயணம்

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கிர்கிஸ்தான் செல்கிறார். அவரது விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்கவில்லை.
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பிரதமர் மோடி சந்தித்து பேசும் திட்டம் கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் சென்று லேசர் குண்டு வீச்சு நடத்தியதைத் தொடர்ந்து, தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடி உள்ளது.

    இதன் காரணமாக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்த நாட்டின் ஒப்புதல் கோரப்பட்டது.

    அதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பாக டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “பிரதமரின் விமானம், ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கேக் செல்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “ பிஷ்கேக் நகருக்கு பிரதமர் விமானம் செல்வதற்கான 2 வழிகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

    இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிஷ்கேக் புறப்பட்டு செல்கிறார்.

    இந்தியாவுக்கும், கிர்கிஸ் தானுக்கும் இடையே நீண்ட காலமாக வரலாறு, கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×