search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் ஊர்வலத்தில் மதம் பிடித்த யானை பாகனை குத்திக் கொன்றது - மற்றொருவர் படுகாயம்
    X

    கோவில் ஊர்வலத்தில் மதம் பிடித்த யானை பாகனை குத்திக் கொன்றது - மற்றொருவர் படுகாயம்

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே கோவில் ஊர்வலத்தில் மதம் பிடித்த யானை பாகனை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாற்றபுரத்தில் உள்ள பகவதி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று மாலை செண்டை மேளம் முழங்க யானைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் திருவம்பாடி குட்டி சங்கரன் யானை உள்பட 21 யானைகள் கலந்து கொண்டன.

    நேற்று மாலை 5 மணியளவில் 21 யானைகளும் அணிவகுத்து சென்றது. குட்டி சங்கரன் யானையை பாகன் பாபுராஜ் (வயது 39) என்பவர் வழிநடத்தி சென்றார். மற்றொரு பாகன் சினீஸ் (34) என்பவர் யானையின் மேல் அமர்ந்து சென்றார். கோவில் அருகே ஊர்வலம் சென்ற போது திடீரென குட்டி சங்கரன் யானைக்கு மதம் பிடித்தது.

    இதனை பார்த்த அங்கு இருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.

    இதனை பார்த்த பாகன் பாபுராஜ் மதம்பிடித்த குட்டி சங்கரன் யானையை அடக்க முயன்றார். அப்போது யானை பாகனை துதிக்கையால் சுற்றி வளைத்து தூக்கி வீசியது. பின்னர் தனது கொம்பால் குத்திக் கொன்றது. இதில் சம்பவஇடத்திலேயே பாபுராஜ் பரிதாபமாக இறந்தார்.

    யானையின் மேல் அமர்ந்து சென்ற மற்றொரு பாகன் சினீஸ் உயிரை காப்பாற்றிக்கொள்ள யானையின் மேல் இருந்து குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் யானை பாதுகாப்பு குழுவினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தனர். 5 மணிநேரம் போராட்டத்துக்கு பின்னர் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×