search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக திரண்ட ரூ.714 கோடி
    X

    கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக திரண்ட ரூ.714 கோடி

    கேரளாவில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தாராளமாக உதவுங்கள் என்று நாட்டு மக்களுக்கு முதல்-மந்திரி கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை நிவாரண நிதியாக ரூ.714 கோடி திரண்டது. #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. பேய் மழை காரணமாக கேரளாவில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. 400 பேர் வரை பலியானார்கள். கேரளாவில் மழை ஏற்படுத்திய சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிதி வழங்கியது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளாவின் மறு கட்டமைப்புக்கு உதவும்படி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவி செய்யுங்கள் என்றும் கூறினார்.

    இதையடுத்து பல்வேறு மாநிலங்கள், கேரளாவிற்கு நிதி உதவி அறிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதிக்கு பிறகு கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வரத் தொடங்கின. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.5.6 கோடி நிவாரண நிதி திரண்டது.

    இதுவரை முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் ரூ.714 கோடி சேர்ந்துள்ளது. இதில், வங்கிகள் மூலம் மட்டும் ரூ.132.62 கோடியும், பேடிஎம் மூலம் ரூ.43 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் ரூ.518.24 கோடியும் நிதி திரண்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலகத்திலும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இங்கு மட்டும் ரூ.20 கோடிக்கு நிதி வசூல் ஆகி உள்ளது. கடந்த விடுமுறை நாட்களில் வசூலான தொகையையும் சேர்த்தால் இந்த நிதி இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக திரண்டுள்ள நிதி, மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடி நிதியை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாகும். #KeralaFloods #KeralaFloodRelief  #KeralaReliefFund
    Next Story
    ×