search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி லட்சக்கணக்கானோர் தவிப்பு - மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்
    X

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி லட்சக்கணக்கானோர் தவிப்பு - மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்

    கேரளாவில் பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடற்படை, கடலோர காவல் படை என்று அனைத்து மீட்புப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. மே மாதம் இறுதியில் பெய்யத் தொடங்கிய இந்த மழை ஆரம்பம் முதலே கனமழையாக இருந்தது.

    2½ மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கேரளா இது போன்ற மழையை எதிர்க்கொண்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் இந்த மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வயநாடு, இடுக்கி, எர்ணா குளம், கோழிக்கோடு, ஆலப் புழா, கண்ணூர், பத்தனம் திட்டா, கொச்சி, மலப்புரம், பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் சேதத்தை சந்தித்துள்ளது.

    இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்கள் தீவு போல காட்சி அளிக்கிறது. இங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பி விட்டன. இதுவரை 22 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 2401 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையின் 5 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் செருதோணி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள கட்டிடங்களும், பாலங்களும் அடித்து செல்லப்பட்டன.

    கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை 13-ந்தேதி காலை 8.30 மணி முதல் 15-ந்தேதி காலை 8.30 மணி வரை பலத்த மற்றும் மிகப்பலத்த மழை பெய்யுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரள மக்களை இந்த மழை எச்சரிக்கை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு 15-ந்தேதி வரையும், ஆலப்புழா, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை வரையும், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று வரையும் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு பகுதிகளில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கனமழைக்கு இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விட்டன. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகி விட்டது. சாலைகள் துண்டிப்பு, நிலச்சரிவு, போன்ற பாதிப்புகளால் லட்சக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர், எடக்கரா, வண்டூர் போன்ற நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு மீட்புப்படையினர் கூட செல்ல முடியாத அளவிற்கு பல இடங்கள் கடுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் நிலச்சரிவால் மண்ணில் புதைந்து விட்டன.

    பம்பை ஆற்றில் கரை புரளும் வெள்ளம் காரணமாகவும் பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, பத்தனம்திட்டா பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.



    கேரளாவையே புரட்டிப் போட்ட இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடற்படை, கடலோர காவல் படை என்று அனைத்து மீட்புப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

    கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், எதிர்க் கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நிவாரண உதவிகளை அறிவித்தார்.

    இந்த நிலையில் கேரள வெள்ளசேதங்களை பார்வையிட மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரள வருகிறார். அவர், ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதங்களை நேரில் பார்வையிடுகிறார். அதன் பிறகு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    Next Story
    ×