search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி - கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
    X

    அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி - கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா

    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை அமெரிக்கா நிர்பந்தித்துள்ள நிலையில், இந்தியா மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியிருக்கிறது. #IranOilimports
    புதுடெல்லி:

    ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்த நாட்டை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக, நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது, இதை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என நிர்பந்தம் செய்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடான இந்தியாவுக்கு, அமெரிக்காவின் இந்த நிர்பந்தம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்பந்தத்திற்கு பணிந்து மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வரைவுத் திட்டத்தை தயாரிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சவுதி மற்றும் குவைத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதேசமயம், டாலருக்குப் பதிலாக ரூபாயில் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை ஈரான் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ஈரானிடம் இருந்து நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேச நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும் என்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இந்தியா பல்வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்கா ஏற்றுமதி செய்தாலும் இந்திய கம்பெனிகள் முதல் ஆளாக வந்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். #IranOilimports #Indiaoilimports

    Next Story
    ×