search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் குதித்து தங்கையை காப்பாற்றிய 9 வயது சிறுமி
    X

    கிணற்றில் குதித்து தங்கையை காப்பாற்றிய 9 வயது சிறுமி

    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டம் அருகே கிணற்றில் விழுந்த தனது தங்கையை துணிச்சலுடன் காப்பாற்றிய 9 வயது சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தலைமையில் பாராட்டுவிழா நடத்தது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டத்தில் தாராபா பகுதியில் உள்ள கெந்துமுன்டா கிராமத்தை சேர்ந்தவள் சாயாகான்டி பாக் (9). அங்குள்ள ஒரு பள்ளியில் 4-வது வகுப்பு படிக்கிறார்.

    இவள் தனது 2 வயது தங்கை மிலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மிலி அருகேயுள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.

    அதைப் பார்த்த சாயா கான்டி உடன் விளையாடிய சிறுமிகளிடம் இத்தகவலை தனது பெற்றோரிடமும், கிராம மக்களிடமும் கூறி அவர்களை இங்கு அழைத்து வரும்படி கூறினாள்.

    பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் தனது தங்கையை காப்பாற்ற துணிச்சலாக கிணற்றில் குதித்தாள். அப்போது தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த தங்கையை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தாள்.

    இதற்கிடையே அங்கு வந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கயிறு மூலம் சாயாகான்டி மற்றும் அவரது தங்கை மிலி ஆகியோரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    சாயாகான்டியின் வீரம் மிக்க இச்செயல் காட்டுத் தீயாக பரவியது. எனவே சோனேபூர் மாவட்ட நிர்வாகம் சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தாசரதி சதாபதி தலைமையில் பாராட்டுவிழா நடத்தினர்.

    மேலும் சாயாகான்டிக்கு தேசிய வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் கல்விக்கு உதவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    தாராபா பகுதியில் இயங்கும் யாதவ் சமாஜ் என்ற சமூக சேவை நிறுவனம் சிறுமி சாயாகான்டிக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவப்படுத்தியது. மகளின் துணிச்சலான செயல் தன்னையும் கிராமத்தையும் பெருமை படுத்தியுள்ளதாக அவளது தந்தை லட்சுமி சரண்பாக் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×