search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட்டை விரட்டியடித்த 3 மாநிலங்கள்
    X

    ஸ்டெர்லைட்டை விரட்டியடித்த 3 மாநிலங்கள்

    25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதால் அப்போதே, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 3 மாநிலங்கள் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க விடாமல் விரட்டியடித்து உள்ளனர். #SterliteProtest #Sterlite
    புதுடெல்லி:

    வேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகியது.

    குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அந்த மாநில மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலை அமைக்கப்படவில்லை.

    அதன் பிறகு தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டது. 4 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை உருவாக்கப்பட்டது. தாமிர ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி கொடுப்பது என்பது எளிதான வி‌ஷயம் அல்ல.

    ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் தவறான தகவல்களை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கொடுத்து அனுமதி பெற்றுவிட்டதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு கூறி உள்ளது.


    அதாவது இந்த ஆலை அமையும் இடத்தில் 25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்க கூடாது.

    ஆனால், இந்த ஆலையின் அருகிலேயே முன்னாறு கடல் தேசிய பூங்கா உள்ளது. அதை மறைத்து சுற்றுச்சூழல் அமைப்பில் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஆலையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். அப்படி கலந்தாலோசனை நடத்தாமலேயே ஒப்புதல் பெற்றதாக சுற்றுச்சூழல் அமைப்பில் காட்டி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என்று அறிவியல் சுற்றுச்சூழல் இயக்கம் கூறி இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல் சுனிதா நாராயணன் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையால் 20 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அதை விரிவாக்கம் செய்ய முயன்றதால் மக்கள் அதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். அவர்கள் பேராட்டம் நியாயமானது என்று கூறினார்.

    இந்த ஆலை தொடர்பாக கோர்ட்டு அமைத்த ஆய்வு கமிட்டி சோதனையில் பல்வேறு முறைகளில் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வில் இதன் கழிவு பொருட்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ஆர்செனிக் ரசாயனம் அதிக அளவில் இருப்பதும், சல்பர் டைஆக்சைடு வாயுவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெளியிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. #SterliteProtest #Sterlite
    Next Story
    ×