search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்
    X

    கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மோசடி: ரிசர்வ் வங்கி தகவல்

    இந்திய வங்கிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. #RBI #BankFrauds
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி என இந்த மோசடி தொழிலதிபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

    அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மேற்படி கடன் மோசடிகளின் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி கடந்த 2013-14-ம் ஆண்டில் 4306 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ரூ.10,170 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து இருக் கிறது. இது 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் முறையே ரூ.19,455 கோடி (4639 சம்பவங்கள்), ரூ.18,698 கோடியாக (4693 சம்பவங்கள்) இருந்துள்ளது.

    மேலும் 2016-17-ம் ஆண்டில் நடந்த 5076 சம்பவங்களில் மொத்தம் ரூ.23,933 கோடி மோசடி அரங்கேறி உள்ளது. இதைப்போல மிகவும் அதிக அளவாக 2017-18-ம் ஆண்டில் ரூ.28,459 கோடி (5152 சம்பவங்கள்) முறைகேடு நடந்துள்ளது. இப்படி கடந்த 5 ஆண்டுகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 718 கோடி தொகை அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மீது உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, இதில் மிகப்பெரிய மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

    முன்னதாக இந்திய வங்கிகளில் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி ரூ.8,40,958 கோடி அளவுக்கு வாராக்கடன் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருந்தது.

    இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,01,560 கோடி வாராக்கடன் இருப்பதாக நிதித்துறை இணை மந்திரி சிவ்பிரதாப் சுக்லா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   #RBI #BankFrauds #Tamilnews 
    Next Story
    ×